ரூ.500 ரூ.1000 நோட்டுகள் செல்லாது: பிரதமர் அதிரடி அறிவிப்பு

ரூ.500 ரூ.1000 நோட்டுகள் செல்லாது: பிரதமர் அதிரடி அறிவிப்பு

 

 

ரூ500-ரூ1000-நோட்டுகள்-செல்லாது

நாட்டில் தற்போது புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கருப்புப் பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும், இந்த நடவடிக்கையால் மக்கள் பீதியடையத் தேவையில்லை. மேற்கண்ட நோட்டுகளை இன்னும் 50 நாள்களுக்குள் வங்கிகளில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என்றும், இன்னும் இரு வாரங்களுக்குள் அந்த நோட்டுகளை வங்கிகளிலும், அஞ்சல் நிலையங்களிலும் மாற்றிக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களவைக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கருப்புப் பண விவகாரத்தை பாஜக தனது பிரசாரத்தில் முக்கிய அம்சமாக முன்வைத்தது. “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டில் குவித்து வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவருவோம்’ என்று அக்கட்சித் தலைவர்கள் நாடு முழுவதும் பிரசாரம் செய்து, வாக்குறுதி அளித்தனர்.

 

அதன்படி, நரேந்திர மோடி தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு, கருப்புப் பண விவகாரத்துக்காக உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எம்.பி.ஷா தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. கருப்புப் பண ஒழிப்புக்காக, பொதுமக்கள் தாமாக முன்வந்து தங்களிடம் உள்ள கருப்புப் பணத்தை வெளியிடும் திட்டத்தையும் மத்திய அரசு அண்மையில் செயல்படுத்தியது.

இந்நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை இரவு தொலைக்காட்சி மூலம் நேரலையாக சிறப்புரையாற்றினார். அப்போது கள்ள நோட்டுகள், கருப்புப் பணம் ஆகியவற்றை ஒழிப்பதற்கான பல முக்கிய அதிரடி நடவடிக்கைகளை அவர் அறிவித்தார். தனது 40 நிமிட சிறப்புரையில் மோடி தெரிவித்ததாவது:

செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. இந்த நோட்டுகளை வைத்திருக்கும் பொதுமக்கள் அவற்றை வங்கிகளிலும், அஞ்சல் நிலையங்களிலும் வரும் 10-ஆம் தேதி முதல், அடுத்த மாதம் (டிசம்பர்) 30-ஆம் தேதிக்குள் (50 நாள்களுக்குள்) அவற்றை டெபாசிட் செய்து கொள்ளலாம்.

அதேபோல், 500, 1,000 ரூபாய் நோட்டுகளை அவற்றை விடக் குறைந்த மதிப்பிலான ரூ.100, ரூ.50, ரூ.20, ரூ.10 போன்ற நோட்டுகளாக வங்கிகளிலும், அஞ்சல் நிலையங்களிலும் வரும் 10ஆம் தேதி முதல் 24-ஆம் தேதிக்குள் (14 நாள்களுக்குள்) மாற்றிக் கொள்ளலாம். அவ்வாறு மாற்ற முன்வரும்போது, பான் அட்டை, ஆதார், வாக்காளர் அடையாள அட்டை போன்ற அரசு அடையாள அட்டைகளைக் கொண்டுவருவது அவசியமாகும்.
ஒரு நாளைக்கு ஒரு நபர் அதிகபட்சமாக ரூ.4,000 மதிப்பிலான 500, 1,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள முடியும்.

இந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய இயலாதவர்கள், ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள் அவற்றை டெபாசிட் செய்து கொள்ளலாம். அப்போது அதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, உரிய காரணத்தைக் குறிப்பிட்டு, அடையாள அட்டைகளையும் சமர்ப்பிக்க வேண்டும்.
வழக்கம்போல், ரூ.100, 50, 20, 10, 5, 2, 1 நோட்டுகளும், நாணயங்களும் தொடர்ந்து செல்லுபடியாகும்.

விமான டிக்கெட்டுகள், ரயில்வே முன்பதிவுகள், அரசுப் பேருந்து டிக்கெட்டுகள், மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கு 500, 1000 ரூபாய் நோட்டுகள் வரும் 11, 12-ஆம் தேதி நள்ளிரவு வரை செல்லுபடியாகும். தவிர, ரூ.2000 நோட்டுகள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்தப் புதிய நடவடிக்கைகள் வெற்றிபெற அரசியல் தலைவர்கள், சமூகத்தின் மற்ற பிரிவுகள் மற்றும் ஊடகங்கள் உதவுவார்கள் என்று நம்புகிறேன் என்றார் மோடி.

Source : www.dinamani.com

You may also like...