3 மாத சம்பள நிலுவையை வழங்கக் கோரி ஊரக வேலைத் திட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

3 மாத சம்பள நிலுவையை வழங்கக் கோரி ஊரக வேலைத் திட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி-வட்டார-வளர்ச்சி-அலுவலகத்தை-முற்றுகையிட்டு-ஆர்ப்பாட்டம்

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் 61 ஊராட்சிகளில் உள்ள 36 ஆயிரம் தொழிலாளர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கான சம்பளத் தொகை ரூ. 4 கோடி வழங்கப்படவில்லை.

இதனை வழங்க வலியுறுத்தி விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கடந்த மாதம் மாவட்டத்தில் பரவலாக டெங்கு காய்ச்சல் பீதி நிலவிய போது துப்புரவுப் பணிகளை செய்தது, சுடுகாட்டில் சுத்தம் செய்தது, சாலையோரக் கழிவுகளை சுத்தம் செய்த நிலையிலும் தங்களுக்கு சம்பளம் வழங்காததைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் இ.ராஜேந்திரன் தலைமை வகித்தார். இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வட்டத் தலைவர் ப.லோகநாதன், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க வட்ட நிர்வாகிகள் லதா, பாக்கியலட்சுமி, ரேணு ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து விரைவில் சம்பள பாக்கி உள்ளவர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.

 

Source : www.dinamani.com

You may also like...